காலையிலேயே கைத்தொலைபேசியில் தோழி தூக்கத்தை கலைத்தாள்.

வருகிற அனைத்துலக மகளிர் தினத்திற்காக ஏதாவது எழுதி கொடுங்களேன் என்றார்.

எதை எழுத என்றேன்?

எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். அவர்களின் வளர்ச்சி.. முன்னேற்றம், சாதனைகள், பெண் சுதந்திரம் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும். பெண்களை பற்றி நல்லதா எழுதுங்கள் என்றார்.

(அது எனக்கு ரொம்ப கஸ்டமாச்சே.. சரி ஊர் வம்பு எதற்கு) எழுத முயல்கிறேன் என்றேன். மதியத்துக்குள் முடித்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். இல்லை இல்லை உத்தரவிட்டார்.


உடனே குளித்து முடித்து பெண்களை உயர்த்தி பாடிய பாரதியையும், பல பெண் வெற்றியாளர்களையும், எழுத்தாளர்களையும் மற்றும் பெண்ணியம் பாடிய சினிமா இயக்குநர்களையும், கவிஞர்களையும் துணைக்கு அழைத்து அமர்ந்தேன்.

முதல் வரி மூளையில் முளைக்கும் அந்த தருணத்தில் என் கைத்தொலைபேசியில் அழைப்பு முட்டியது. அடடா ஆரம்பிக்கும் போதே மணி அடிக்குதே.. நல்ல சகுனம் என நம்பி எடுத்தேன்.

மறு முனையில் இன்னொரு தோழி. வழக்கமான நலம் விசாரிப்பிற்கு பிறகு, தனது சோகக் கதையை ஆரம்பித்தார். அவருடைய இன்னொரு தோழியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அரை மணி நேரமாக அரைத்து தள்ளிக் கொண்டிருந்தார்.


எப்படி தப்பிப்பது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே தனக்கு இன்னொரு அழைப்பு வருகிறது என தானாகவே அவர் அழைப்பை துண்டித்தார். அப்பாடா இனி எழுத ஆரம்பிக்கலாம் என நினைத்த போது..

புலனத்தில் சராமாரியாக காலை வணக்கமும் மெசேஜ்களும் தன்முனைப்பான வீடியோக்களும் வரிசையாக வடம் பிடித்துக் கொண்டிருந்தது. ஒரு சம்பிரதாயத்திற்கு வணக்கம் வைத்து விட்டு வேலையை தொடரலாம் என நினைக்கையில்...

மனைவி கீழே பசியாற அழைத்தார். சரி முதலில் வயிற்றை கவனிப்போம் பிறகு பெண்ணியம் பேசுவோம் என இறங்கினேன். பசியாறும் போதே வீட்டில் தண்ணீர் வரவில்லை முதல் தபால்காரன் வந்து போன கதை வரை சொன்னார் துணைவி.

ஆனால் என் சிந்தனையில் எதை தொட்டு எழுதுவது; எப்படி எழுதுவது என்பதே ஓடிக்கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்த சிறு இடைவெளியில் தோழிகளின் முகநூல் பக்கம் ஒரு வலம் வந்தேன். ஏதாவது ஒரு பயனான விசயம் கிடைத்தால் அதையே எழுதிடலாம் என நினைத்து ஆராய்ச்சி வண்டியை தட்டினேன்.


சுற்றிய திசையெல்லாம் காலையில் பல் விலக்கியது, பக்கோடா சாப்பிட்டது, புது உடையின் வண்ணங்கள், நேற்று ஆடிய நடனங்கள், திரையரங்கில் பார்த்த படங்கள், நடிகர்களைப் போல் dub mash செய்வது, யார் மீதோ உள்ள கோபங்களின் தாக்கம் என பல செய்திகளை படித்து தாண்டி வருவதற்குள் மதியம் எட்டி விட்டது.

ஐயகோ இத்தனை தாமதம் ஆகி விட்டதே, இன்னும் சிறிது நேரத்தில் முடித்தாக வேண்டுமே என பதற்றத்தோடு இருந்தேன். எதை எழுதுவது என பிடிபடாத நிலையில், என் மனைவி குழந்தையை கொஞ்சம் நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என கையில் கொடுத்தார்.

இனி நீ எப்படி எழுதுறேனு நான் பார்க்கிறேன், என என் 5 மாத குழந்தை எனை பார்த்து சிரிப்பது போல் இருந்தது. குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஒரு புறமும்; எழுத வேண்டும் என ஆர்வம் ஒரு புறமும் மாறி மாறி இழுத்தது. ஆனால் இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தன் வேலையை கவனிக்கத் தொடங்கிய மனைவியின் மீது பற்றிக்கொண்டு வந்தது.

குழந்தை பிறந்து சிறு ஓய்விற்கு பிறகு இப்போதுதான் நன்றாய் வேலை செய்ய தொடங்கியிருந்தார் என் மனைவி. காலையில் எழுந்தது முதல் வீட்டு வேலை செய்வதும், சமைப்பதும், குழந்தையை கவனிப்பதிலுமே உழைத்து உடல் சோர்ந்திருந்தது.


அலுவகத்திலும் கூட தனது ஓய்வு சமயத்தில் தங்கிப்போன வேலைகளை முடிப்பதில் பல சிரமங்களை எதிர் நோக்கி இருந்தாலும், வீட்டில் என்னையோ குழந்தையையோ கவனித்துக் கொள்வதில் எந்த குறையும் வைக்கவில்லை.

தன் பணிகளுக்கிடையே என் வேலைகளையும் என் குடும்ப நிகழ்வுகளை நினைவுப்படுத்தவும் அவர் மறந்தததுமில்லை.
குழந்தை பராமரிப்பு மற்றும் வேலையின் அழுத்தத்தின் காரணமாகவே சில வேலைகளில் எங்களுக்குள் பிரச்சனைகள் வந்திருக்கலாம். ஆனால் அன்றாட பணிகளின் காரணமாக பல ஆண்கள் அதை உணர்வதில்லையோ என தோன்றியது.

அவர்களும் நம்மை போல மனிதர்கள்தானே. அவர்கள் மனம் மற்றும் சிரமம் அறிந்து நாம்தானே அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால் எல்லா நேரமும் நம் வசதிக்காக வாழ்ந்து அவர்களை அசதி அடைய வைத்துவிடுகிறோமே என குற்ற உணர்ச்சி சம்மட்டியால் அடித்தது.

இதையெல்லாம் புரிந்துக் கொள்ளாததால்தான் நிறைய குடும்பங்களில் வீண் பிரச்சனைகள் வந்து விவாகாரம் வரை இழுத்துச் செல்கிறது. பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களின் சவால்களையும் ஆண்கள் புரிந்து உணர்ந்து நடந்தால் எல்லாம் சுபம் என மூளையில் உறைத்தது. அதே நேரத்தில் என் அலைபேசியும் அலறியது.

ஆம் என்னை காலையில் மகளிர் தினத்துக்காக எழுத கேட்ட அதே தோழிதான். கைத்தொலைபேசியை அழுத்தினேன்.


“என்ன பெண்ணியம் தயாரா?” என்றார்.

“கண்டிப்பாக எழுதுகிறேன், ஆனால் பெண்களுக்காக அல்ல ஆண்களுக்காக...” என்றேன். இதோ என்ன எழுத வேண்டுமென சிந்தனையுடன் தெளிவாய் எழுதத் தொடங்குகிறேன்.


உபயம்: மனைவி மற்றும் தாயார்
இப்படிக்கு: சற்குணன் சண்முகம்
Image credit: Image credit: LemonBoost, Weheartit, MuseumartPaintings, KaruppuRojakkal, Raakheeonquora, Pinterest, FineartAmerica, Nogorgoli and Artzolo.